ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகியவை 5 ஜி கள சோதனைகளுக்கான இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றைப் பயன்படுத்த திட்டங்களை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விர்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டெட் ரியாலிட்டி, IoT போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் கல்வி, வேளாண்மை மற்றும் சுகாதாரத் துறைகளின் மேம்பாட்டுக்கு 5ஜி தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் (COAI) இயக்குனர் எஸ்.பி. கோச்சர் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ஒரு சிறந்த தொழில்நுட்பமாக வளர்ந்து வருகிறது, மேலும் 5 ஜி சகாப்தத்தில் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக இந்தியாவில் IoT நிலைநிறுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவை விவசாயத்திற்கென சிறப்பாக பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
5ஜி சோதனைகளை மேற்கொள்வதற்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் 700 MHz, 3500 MHz மற்றும் 26 GHz கற்றைகளை ஒதுக்கியுள்ளது. 5ஜி எனும் அடுத்த தலைமுறை நெட்வொர்க் சோதனையை மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் அதிக பயனர்களை ஈர்க்க முடியும் என்பதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் சோதனைகளை மேற்கொள்ள கற்றைகள் மற்றும் அனுமதியைக் கோரியுள்ளனர்
நிதி நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் கூறுகையில், பெருநகரங்கள் மற்றும் சில பெரிய நகரங்கள் ஆரம்ப கட்டத்தில் 5ஜி சேவைகளைப் பெற வாய்ப்புள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மெட்ரோ மற்றும் A நகரங்களில் 5 ஜி சேவைகளை தொடங்குவதற்கென சுமார் ரூ.78,800 கோடி முதல் ரூ.1.3 லட்சம் கோடி வரை செலவிடவாய்ப்புள்ளது என்றும் அந்நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ ஒரு மெய்நிகர் வகுப்பறையை உருவாக்க சாம்சங் நிறுவனத்துடனும், அதே நேரத்தில் ஏர்டெல் ட்ரோன்களை உருவாக்க எரிக்சனுடன் இணைந்து செயல்படுகிறது. நிறுவனம் பாதுகாப்புக்காக ட்ரோன்களை உருவாக்க விரும்புகிறது.