தற்போது வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் சார்ஜ் செய்ய USB டைப்-C போர்ட்டுடன் வந்தாலும், அதிக செயல்திறன் கொண்ட அதிக விலையிலான மடிக்கணினிகளில் எல்லாம் அதற்கென தனிப்பட்ட சார்ஜிங் கனெக்டர்களும் சார்ஜிங் pin களும் தான் இருக்கின்றன. இதற்கான முக்கியமான காரணம் USB டைப்-C சார்ஜர் 100W க்கும் அதிகமான சக்தியைத் தாங்காது என்பதால் தான்.
ஆனால், இனிமேல் அதை பற்றிய கவலை இல்லை. புதிய USB தரநிலைகளின் படி, அனைத்து USB டைப்-C சார்ஜர்களும் 240W வரை மின்சார விநியோகத்தைப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், அனைத்து USB டைப்-C கேபிள்களும் இந்த வகையான மின்சார விநியோகத்தை வழங்க முடியாது. இதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேபிள்களால் மட்டுமே இதை செய்ய முடியும் என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
USB Implementers Forum நிர்ணயித்த சமீபத்திய தரநிலைகளின்படி, 240W வரை மின்சாரம் வழங்கக்கூடிய புதிய USB டைப்-C தரநிலை Extended Power Range (EPR) என கூறப்படும். மேலும் இந்த EPR உடனான தயாரிப்புகள் 2021 ஆண்டின் இறுதியில் சந்தைகளில் வர வாய்ப்புள்ளது. இந்த புதுப்பிப்பு USB PD பதிப்பு 3.1 இன் ஒரு பகுதியாகும், இது பின்னோக்கிய இணக்கத்தன்மை கொண்டது.
USB PD பதிப்பு 3.1 – புதிய விவரக்குறிப்புகள்
100W USB டைப்-C சார்ஜர் 20V மற்றும் 5A மின்னோட்டத்தைப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் 240W USB டைப்-C கேபிள் 48V வரை மின்னழுத்தத்தை, 5A மின்னோட்டத்துடன் வழங்க முடியும்.
240W USB-PD சார்ஜரை 100W அல்லது அதற்கு மேல் ஆற்றல் தேவைப்படும் மதிப்பிடப்பட்ட சாதனங்களுடன் பயன்படுத்தலாம் என்பதையும், 100W க்கும் குறைவான சக்தி தேவைப்படும் தயாரிப்புகளுடன் பயன்படுத்துவது நல்லதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, 240W மதிப்பிடப்பட்ட USB டைப்-C சார்ஜர் 100W, 140W, 180W மற்றும் 240W மின்சார விநியோகத்தையும் கூட வழங்க முடியும். எனவே, ஒற்றை சார்ஜர் பல தயாரிப்புகளை சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும், குறிப்பாக USB-PD சான்றளிக்கப்பட்ட சார்ஜர்களுடன் வேலை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.