கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாடு முழுக்க கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநிலங்கள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. நோய் தொற்றில் இருந்து காத்துக்கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வரும் நிலையில் சிலருக்கு இன்னும் அச்சம் இருந்துதான் வருகிறது.தடுப்பூசியினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மருத்துவ துறை விளக்கியிருந்தும், பொதுமக்களில் சிலருக்கு அச்சம் நீங்கவில்லை. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்ற அதிரடி முடிவை உத்தர பிரதேச மாநிலம், பிரோசாபாத் மாவட்ட ஆட்சியர் சந்திர விஜய் சிங்தான் எடுத்துள்ளார்.
மேலும் அரசு ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி மாவட்ட தலைமை வளர்ச்சி அலுவலர் கூறுகையில், ‘தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது என கலெக்டர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின்படி, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் மீது அந்தந்த துறை நடவடிக்கையை தொடங்கும். அத்துடன், மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும். எனவே சம்பளம் கிடைக்காது என்ற பயத்தில் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.மேலும் ஆட்சியரின் இந்த உத்தரவுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.