வரட்சி நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு வேண்டுகோள்
வரட்சி நிவாரணப் பணிகளுக்கு உதவ ஐ நா சபை, உலக உணவுத் திட்டம், உலக விவசாயத் தாபனம் ஆகிய நிறுவனங்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் கடுமையான வரட்சி நிலை குறித்து தீவிர கவனம் செலுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையும் அதன் துணை நிறுவனங்களும் வரட்சி நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி செயலணிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளன.
ஐ நா வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஐ நா அபிவிருத்தித் திட்ட வதிவிட பிரதிநிதி, உலக உணவுத் திட்ட பிரதிநிதியும் இலங்கைக்கான பணிப்பாளருமான பிரண்டா பார்ட்டன் மற்றும் ஐ நா உலக உணவுத் திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏர்தரின் கசின் ஆகியோர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேைவை நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து நாட்டில் நிலவும் வரட்சி நிலை குறித்தும் அதற்கான நிவாரண ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினர்.
வரட்சி நிவாரணப் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக செயலணியொன்றை அமைத்தமை தொடர்பாக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஐ நா உயரதிகாரிகள், இந்த அனர்த்த நிலை குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
முதல் நடவடிக்கையாக வரட்சி நிலை தொடர்பான தொடர்பாடல், மதிப்பீடு மற்றும் மேற்பார்வை நடிவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணர்களை வழங்கமுடியும் என ஐ நா பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
வரட்சி காரணமாக தொழில்களை இழந்த கிராமிய மக்களுக்கு தொழில்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு உணவு அல்லது பணத்தை தமது நிறுவனத்தினால் வழங்க முடியும் என உலக உணவுத் திட்ட பிரதிநிதி தெரிவித்தார். உணவு அல்லது பணம் வழங்கும் இந்நிகழ்ச்சித்திட்டம் பல மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இது ஏழை மக்கள் தனிப்பட்ட கடன் வழங்குனர்களிடமிருந்து அதிக வட்டிக்கு கடன்களைப் பெறுகின்ற நிலையை தவிர்க்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலகு கடன்களை வழங்கும் அரச முகவர் நிலையங்களிலிருந்து கடன்களைப் பெற்றுக்கொள்ள மக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வரட்சியினால் ஏற்படக்கூடிய முக்கிய பிரச்சினை குடிநீர் பற்றாக்குறையாகும் என்றும் அது பல்வேறு நீண்ட கால சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஐ நா அதிகாரிகள் தெரிவித்தனர். வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நீர் வழங்க போதுமானளவு பௌசர்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் வரட்சி நிலை குறித்து கரிசனை செலுத்திவரும் ஐ நா அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, நிலைமைகளை மேலும் கண்காணிப்பதற்காக ஒவ்வொரு வாரமும் நடைபெறும் செயலணியின் கூட்டங்களுக்கு சமூகமளிக்குமாறு அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.