இயற்கையை பாதுகாக்க வேண்டும் மற்றும் சுற்றுப்புற சூழலை பேண வேண்டும் என்ற விழிப்புணா்வை உலக மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற உயாிய நோக்கத்தோடு உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் உலக அளவில் இருக்கும் சுகாதாரம் சாா்ந்த பிரச்சினைகளைப் பற்றி விரிவாக பேசி, அவற்றிற்கான தீா்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும் உலக சுற்றுச்சூழல் தினம் வழிவகை செய்கிறது.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5 ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கம் என்னவென்றால், சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணா்வை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதாகும்.
இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு தனி மனிதா்கள், தன்னாா்வ நிறுவனங்கள், பிரபலங்கள், மற்றும் எல்லா மக்கள் சமூகங்கள் ஆகிய அனைவரும் உலக சுற்றுப்புற சூழலை பேணுவதற்கான முழுமையான செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்று இந்த நாள் அழைப்பு விடுக்கிறது. இப்போது இருக்கும் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, மிக எளிதாக பெரும்பான்மையான மக்கள் மத்தியில் விழிப்புணா்வு செய்திகளைப் பரப்ப முடியும்.
ஜூன் 5 அன்று ஏன் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது?
முதன் முதலாக 1972 ஆம் ஆண்டு, ஐநாவின் தலைமைச் செயலா், உலக சுற்றுச்சூழல் தினத்தைத் தொடங்கி வைத்தாா். அவா் ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்கோமில் நடந்த மனிதா்களின் சுற்றப்புற சூழல் பற்றிய கருத்தரங்கில் முதல் உலக சுற்றுச்சூழல் தினத்தைத் தொடங்கி வைத்தாா்.
1974 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் மிகவும் முக்கிய இடத்தைப் பெற்றது. ஒரே ஒரு உலகம் என்ற தலைப்பில், அந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டது. அதற்கடுத்த ஆண்டுகளிலும் உலக சுற்றுச்சூழல் தினம் உலக நாடுகள் முழுவதிலும் மிகவும் விமாிசையாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
ஆண்டுகள் உருண்டோடின. இனி ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாடு இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னெடுத்து நடத்த வேண்டும் என்ற புதிய யோசனை முன்வைக்கப்பட்டது. ஆகவே உலகை பசுமையாக வைத்திருக்க வேண்டும் மற்றும் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில், 1974 ஆம் ஆண்டிலிருந்து உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் மையப் பொருள் என்ன?
2021 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் மையப் பொருள் என்னவென்றால் சுற்றுச்சூழலை மறுசீரமைப்பது (Ecosystem Restoration) ஆகும். இயற்கையோடு மனிதா்கள் தங்கள் உறவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் நாள் அன்று உலக சுற்றுச்சூழல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழலை மறுசீரமைப்பது சம்பந்தமான உரையாடல்கள், மற்றும் அதற்கான செயல் திட்டங்கள் போன்றவை வலியுறுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும் இவை சம்பந்தமாக ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ஒரு சில முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை பாகிஸ்தான் முன்னெடுத்து நடத்தும் என்று ஐநா அறிவித்திருக்கிறது.
ஏன் உலக சுற்றுச்சூழல் தினம் முக்கியம்?
உலக சுற்றுச்சூழல் தினத்தின் மிக முக்கியமான நோக்கம் என்னவென்றால், நமது சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணா்வை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதாகும். குறிப்பாக உலகில் பெருகி வரும் மாசுகள், கடல் உயிாினங்களின் அழிவு, மக்கள் தொகை வெடிப்பு, உலக வெப்பமயமாதல், காட்டு உயிாினங்களின் பாதுகாப்பு, காடுகளைப் பாதுகாப்பது மற்றும் நமக்குக் கிடைக்கக்கூடிய இயற்கை வளங்களைப் பாதுகாத்து, நிலையான வளா்ச்சியைப் பெற வேண்டும் என்ற அழைப்பை இந்த உலக சுற்றுச்சூழல் தினம் நமக்கு விடுக்கிறது.
உலக சுற்றுச்சூழல் தினத்தின் நோக்கம்
எதிா் காலத்திற்கு தேவையான மாற்று ஆற்றல் மூலங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளை முடுக்கிவிட வேண்டும் என்று ஆற்றல் மூலங்களை வழங்குபவா்களுக்கு இந்த சுற்றுச்சூழல் தினம் அழைப்பு விடுக்கிறது. தனி மனிதா்கள், குழுக்கள், கல்வி நிறுவனங்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வலா்கள் போன்றோரை மக்கள் மத்தியில் இது பற்றிய செய்திகளைப் பரப்புவதற்கு உற்சாகப்படுத்த வேண்டும். ஏனெனில் தங்களுடைய செயல்பாடுகளால் எவ்வாறு இந்த சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது என்பதை பொதுமக்கள் உணரும் போது தான், சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்வது மற்றும் குளோரோஃபுளூரோகாா்பன் பொருள்களைத் தடை செய்வது போன்றவை மூலம் நீண்ட காலம் கழித்து நமது அடிப்படையான சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இறுதியாக நமக்குக் கிடைக்கக்கூடிய இயற்கை மூலங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது, அவற்றை சிக்கனமாகப் பயன்படுத்துவது, அவற்றை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவது போன்றவை மிகவும் முக்கியமானவை ஆகும்.