தெலுங்கானாவில் கொரோனா வைரசல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,300-ஐ கடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சிலா மாவட்டம், நெமிலி குட்டா தண்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, காமரெட்டி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்துக்கு பிறகு அப்பெண்ணுக்கும், அவருடைய மாமியாருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இதற்கிடையே, அப்பெண்ணின் மாமியாருக்கு கடந்த வாரம் கொரோனா-வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவரை வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
மாமியாருக்கு கொரோனா என்பதால் ஒரே வீட்டில் வசித்தாலும், அவரிடம் இருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து மருமகள் விலகியே இருந்து வந்துள்ளார்.
இதைக் கண்டு பொறுக்காத மாமியார் தன் மருமகளுக்கும் கொரோனா வைரஸை பரப்பவேண்டுமென்ற திட்டத்துடன் வேண்டுமென்றே, தன்னுடைய மருமகளை அவ்வப்போது கட்டிப்பிடித்து பரிவுடன் இருப்பதுபோல் நடித்து வந்திருக்கிறார்.
மேலும், அவருடைய பேரக்குழந்தையையும் அவர் கட்டிப்பிடித்துள்ளார். இதனால் மருமகளுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதைக் காரணம் காட்டி மருமகளையும் அவர் வீட்டிலிருந்து துரத்தியுள்ளார்.
அவர், வேறு வழியில்லாமல் தன்னுடைய சகோதரி வீட்டுக்கு சென்று தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்து வருகிறார். வீட்டிற்கு வந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மாமியாரின் திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 7 மாதமாக ஒடிசாவில் ஒப்பந்த ஓட்டுனராக பணியாற்றி வருவதால் அவராலும் தன்னுடைய மனைவிக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு மாமியார் செய்து வரும் கொடுமைகளை தாங்கி கணவன் வீட்டில் வசித்து வந்த நிலையில் கொரோனா வைரசைப் பரப்பி தன்னை வீட்டை விட்டு துரத்தியதாக வேதனை தெரிவித்துள்ளார்.
மாமியார், மருமகளுக்கு கொரோனா பரப்பி வீட்டை விட்டு விரட்டிய சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.