கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்பதற்காக தென் கொரியாவை சென்றடைந்த இலங்கை கால்பந்தாட்ட வீரரான ரிப்கான் மொஹமட்டிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த முதலாம் திகதியன்று தென் கொரியாவின் சியோல் நகர விமான நிலையத்தை சென்றடைந்த இலங்கை கால்பந்தாட்ட வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 33 பேர் கொண்ட குழுவினருக்கு அந்நாட்டு அதிகாரிகளினால் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் இலங்கையின் மத்திய கள வீரரான ரிப்கானுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவரிடம் மீண்டுமொருமுறை பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும், ஏனைய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சியோல் நகரிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார்.
ரிப்கான் மொஹமட்டின் தற்போதைய நிலை குறித்து எமக்கு எதுவும் கூறமுடியாது. எனினும், எமது கால்பந்தாட்ட குழாம் 14 நாட்கள் ‘பயோ பபிள்’ முறையை பின்பற்றியிருந்ததுடன், பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டதை அடுத்தே இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக அனுர டி சில்வா மேலும் குறிப்பிட்டிருந்தார்.