சூரிய பகவானின் மகனாக சனி பகவான், வைகாசி மாதத்தின் அமாவாசை நாளில் பிறந்ததாக கூறப்படுகிறது. சனி பகவான் பிறந்த நாள் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. வேத ஜோதிடத்தில், சனி கிரகம் தான் சனி பகவானாக குறிப்பிடப்படுகிறது மற்றும் இது மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சனி ஜெயந்தி நாளில் சனி பகவானை வணங்குவதோடு, ஏழை மக்களுக்கு முடிந்ததை தானம் செய்தால், ஏழரை சனி, கண்டக சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி உள்ளவர்களுக்கும், சனி தோஷம் உள்ளவர்களுக்கும் தோஷம் நீங்கி நன்மைகள் நடக்கும்.சனி பகவானை மகிழ்விக்கவும், ஆசீர்வாதத்தைப் பெறவும் சனி ஜெயந்தி அன்று பலர் விரதம் இருந்து சனி பகவானை வணங்குவார்கள். உங்களுக்கு 2021 ஆம் ஆண்டில் சனி ஜெயந்தி எப்போது, பூஜைக்கான நேரம் என்ன மற்றும் சனி பகவானை வழிபடுவதன் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.
2021 சனி ஜெயந்தி தேதி
வைகாசி மாதத்தின் அமாவாசை நாளன்று சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு சனி ஜெயந்தியானது ஜூன் 10 ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது.
2021 சனி ஜெயந்தி திதி
அமாவாசை திதி தொடக்கம் – ஜூன் 9, 2021, 1:57 பிற்பகல்
அமாவாசை திதி முடிவு – ஜூன் 10, 2021, 04:22 பிற்பகல்
வேத ஜோதிடத்தில் சனியின் முக்கியத்துவம்
கிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம். பலர் தங்கள் வாழ்வில் அதன் செல்வாக்கின் காரணமாக இதை எதிர்மறையாக கருதுகின்றனர். ஆனால், உண்மையோ அதுவல்ல. சனி பகவான் மிகவும் கண்டிப்பானவர். தொடர் முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையுடன் தடைகளை கடக்கும் ஒருவருக்கு வெற்றிக் கனியை வழங்கக்கூடியவர். எனவே தான் இவர் நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது ஏழரை சனியை எதிர்கொள்ளக்கூடும் என்று வேத ஜோதிடம் கூறுகிறது. இந்த ஏழரை சனி காலத்தில் ஒருவர் பல போராட்டங்களையும், கடினமான காலங்களையும் சந்திக்க வேண்டிருந்தாலும், ஒருவர் நேர்மையான வழியில் நடந்து கொண்டால், வெற்றி காண்பார். மேலும் ஒருவரின் ஜாதகத்தில் சனி சாதகமான நிலையில் இருந்தால் அதிசயங்கள் நிகழும். ஆனால் சாதகமான நிலையில் இல்லாவிட்டால் வாழ்க்கை மிகவும் சிக்கலாக இருக்கும்.
சனி ஜெயந்தி அன்று என்ன செய்ய வேண்டும்?
தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால், சனி ஜெயந்தி அன்று கருப்பு நிற ஆடையை தானமாக வழங்கலாம். எள்ளு சாதத்தை தயாரித்து சனி பகவானுக்கு படைத்து வழிபட்டு, பின் அதை காகத்திற்கு கொடுக்கலாம். வீட்டிலேயே முதலில் சிவபெருமானை வணங்கிவிட்டு, பின் சனி பகவானை நினைத்து எள்ளு தீபம் ஏற்றி வழிபடலாம். சனி ஜெயந்தி அன்று ஏழை மக்களுக்கு உதவிகளை செய்து வந்தாலே, சனி பகவானின் அருளைப் பெறலாம்.