பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக இல்லாதொழிக்க முடியாது என்று தொலைநோக்கு கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொவிட் நிலவரம் தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
பொது மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய இம்மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் கடுமையான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மீள ஆரம்பிக்க தீர்மானிககப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் புதிதாக வகுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. இதற்கமைய பொது போக்குவரத்து சேவை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தற்போது நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் தற்போதும் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.
ஒரு தரப்பினரது பொறுப்பற்ற செயற்பாடுகள் அனைத்து தரப்பினருக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டங்களை செயற்படுத்துவது அவசியமாகும்.
தற்போதைய நெருக்கடியான நிலையில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் கொவிட் வைரஸ் ஒழிப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை தோற்றம் பெறும்.
சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை சமமான முறையில் முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது. ஆகவே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.