புதுமுக வீரரான அசாம் கான் ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி இருந்தாலும் உள்ளூர் மற்றும் லீக் வடிவிலான 20 ஓவர் கிரிக்கெட்டில் 36 ஆட்டங்களில் விளையாடி அதிரடி காட்டியிருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு சென்று ஐந்து 20 ஓவர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இவ்விரு தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இவ்விரு தொடர்களிலும் 20 ஓவர் அணியில் புதுமுக வீரராக பேட்ஸ்மேன் 22 வயதான அசாம் கான் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், முன்னாள் விக்கெட் கீப்பருமான மொயின் கானின் மகன் ஆவார். ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி இருந்தாலும் உள்ளூர் மற்றும் லீக் வடிவிலான 20 ஓவர் கிரிக்கெட்டில் 36 ஆட்டங்களில் விளையாடி அதிரடி காட்டியிருக்கிறார். குறிப்பாக இவரது சிக்சர் அடிக்கும் திறன் தான் தேர்வாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஓராண்டுக்கு முன்பே அவரை அணிக்கு இழுப்பது குறித்து தேர்வு குழு யோசித்தது. ஆனால் அந்த சமயத்தில் அவரது உடல் எடை கிட்டத்தட்ட 130 கிலோவாக இருந்தது. ஓரளவு மெலிந்தால் தான் அணித்தேர்வுக்கு பரிசீலிக்க முடியும் என்று கூறி விட்டனர். அதன் பிறகு உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் அவர் 30 கிலோ குறைத்து இப்போது 100 கிலோ கொண்டவராக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.