பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை பெலாரசின் சபலென்கா அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ள வீராங்கனைகளில் ஒருவராக கணிக்கப்பட்ட 4-ம் நிலை நட்சத்திரம் அரினா சபலென்கா (பெலாரஸ்) 3-வது சுற்றில் நேற்று அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். அவரை தரவரிசையில் 32-வது இடம் வகிக்கும் அனஸ்டசியா பாவ்லிசென்கோவா (ரஷியா) 6-4, 2-6, 6-0 என்ற செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய 4-வது சுற்றை எட்டினார். பந்தை வலுவாக வெளியே அடித்து விடும் தவறுகளையும் (39 முறை), டபுள்பால்ட்டையும் (8) சபலென்கா அதிக முறை செய்ததால் பின்னடைவை சந்திக்க வேண்டியதாகி விட்டது.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் மேடிசன் கீசை (அமெரிக்கா) வீழ்த்தினார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் 4-வது சுற்றை எட்டிய அஸரென்கா அடுத்து பாவ்லிசென்கோவாவை சந்திக்கிறார். எலினா ரைபகினா (கஜகஸ்தான்), தமரா ஜிடன்செக் (சுலோவேனியா) ஆகியோர் தங்களது டென்னிஸ் வாழ்க்கையில் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாமில் 4-வது சுற்றை எட்டியிருக்கிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 6-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-2, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லாஸ்லோ டெரை (செர்பியா) சாய்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
கேஸ்பர் ரூட்டுக்கு (நார்வே) எதிராக 4 மணி 35 நிமிடங்கள் மல்லுகட்டிய 46-ம் நிலை வீரரான டேவிடோவிச் போகினா (ஸ்பெயின்) 7-6 (7-3), 2-6, 7-6 (8-6), 0-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக 4-வது சுற்றை அடைந்தார்.
நிஷிகோரி (ஜப்பான்), பெடெரிகோ டெல்போனிஸ் (அர்ஜென்டினா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 13 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-0, 7-5, 6-2 என்ற நேர் செட்டில் பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை விரட்டினார். பிரெஞ்ச் ஓபனில் முதல்முறையாக இரவில் ஆடிய நடால் வெற்றியோடு அமர்க்களப்படுத்தியிருக்கிறார். நடாலுக்கு எதிராக கேஸ்கியூட் இதுவரை வெற்றி பெற்றதில்லை. நடாலுடன் மோதிய 17 ஆட்டங்களிலும் கேஸ்கியூட்டுக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது. ‘களிமண் தரை’ நாயகனான நடாலுக்கு 35-வது வயது பிறந்துள்ளது. பிறந்த நாள் பரிசாக இந்த வெற்றி கிட்டியுள்ளது.
கேஸ்கியூட்டுடன் சேர்த்து களம் கண்ட 18 பிரான்ஸ் வீரர்களும் 2-வது சுற்றுடன் நடையை கட்டி விட்டனர். 3-வது சுற்றுக்கு ஒரு பிரான்ஸ் வீரரும் தகுதி பெறவில்லை. இந்த வகையில் 1968-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் பிரான்சின் மோசமான செயல்பாடாக பதிவாகியுள்ளது. இதே போல் பிரான்ஸ் வீராங்கனைகளும் இந்த சீசனில் 2-வது சுற்றை தாண்டாத பரிதாபம் நிகழ்ந்துள்ளது.