இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திற்குள் பாரிய நெருக்கடிகள் உருவெடுத்திருப்பதை அதன் பங்காளிக் கட்சிகளின் தனித்தனி பேச்சுவார்த்தைகள் புலப்படுத்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவிக்கின்றது.
விரைவில் நாட்டிற்காக அதிரடி தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக அந்தக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவிக்கின்றார்.
கண்டியில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசாங்கத்திலுள்ள பங்காளிக் கட்சிகள் தனித்து பேச்சுக்களை நடத்திவருகின்றன. அதனூடாக அரசாங்கத்திற்குள் குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதே தெளிவாகின்றது.
எதிர்வரும் நாட்களில் இந்த நெருக்கடி மிக்க தருணங்களை எப்படி கையாள்வது என்பது பற்றி பேச்சு நடத்தப்பட வேண்டும். குறிப்பாக எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் இந்த நிலைமைகளிலேயே எதிர்கொள்ளவும் வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையான நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யக்கூடாது என்கின்ற விடயத்தை தற்போதைய அரசாங்கம் மீறிச் செயற்படுகின்றது. அதனைவிட சுற்றாடலுக்கும் இன்று பாரிய சவால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
பொருளாதாரம், விவசாயம் உட்பட பல துறைகளிலும் மக்கள் இன்று பாரிய கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இவற்றை சிந்திக்காத தற்போதைய அரசாங்கம், அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
அந்த வகையில் சுதந்திரக்கட்சியின் மறுசீமைப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. விரைவில் நாட்டிற்காக களமிறங்குவோம் என்றார்.