பிரான்ஸ் உதவியுடன், சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் கொண்டு வந்ததாக, பிரித்தானிய எல்லை பாதுகாப்புப்படை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய உள்துறை அலுவலகம் புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் வர விடாமல் செய்ய என்னெவெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமோ அத்தனையும் எடுத்துக்கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே பிரித்தானியாவிலிருக்கும் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற புதிது புதிதாக திட்டம் வகுத்துக்கொண்டே இருக்கிறார் பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல்.
ஆனால், தற்போது பிரான்சுடன் இணைந்து பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையே புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக கொண்டு வந்துள்ளது தெரியவந்துள்ளதையடுத்து பிரித்தானியா பரபரப்படைந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உள்துறை அலுவலகம் உடனடியாக விசாரணை ஒன்றைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரய வருகையில்,
கடந்த சனிக்கிழமை பிரான்சிலிருந்து பிரெஞ்சு ரோந்துக் கப்பலான Athos, கலாயிஸ் துறைமுகத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை ஆங்கிலக் கால்வாய்க்கு கொண்டு வர, பிரித்தானிய கடலோரக் காவல் படைக் கப்பலான HMC Valiant, பிரெஞ்சு கடல் பகுதிக்கு சென்று, ஒரு சிறிய படகில் அந்த புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு டோவர் துறைமுகத்துக்கு கொண்டு சேர்த்துள்ளது.
இந்த இரகசிய சம்பவத்தின் போது, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய அதிகாரிகளுக்கிடையே நடந்த ரேடியோ உரையாடல் சிக்கியதைத் தொடர்ந்து விடயம் வெளிவந்திருக்கிறது.
இந்தச் சம்பவத்தால் பிரித்தானிய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், எல்லை பாதுகாப்பு படையின் வேலையே பிரித்தானிய எல்லையை பாதுகாப்பதுதான், சட்ட விரோதமாக மக்களை அனுமதிப்பது அல்ல என்று கூறியுள்ளார்.
இந்த அதிரவைக்கும் தகவல் வெளியானதை தொடர்ந்து, இப்படி ஒரு விடயம் நடந்திருக்கக்கூடாது என்று கூறியுள்ள பிரீத்தி பட்டேல், நேற்று இரவு அவசரமாக விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்த அன்று, 144 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளார்கள். அவர்களில் எத்தனை பேரை பிரித்தானிய கடலோரக் காவல் படைக் கப்பலான HMC Valiant அழைத்து வந்தது என்பது சரியாக தெரியவில்லை என கூறப்படுகிறது.