நவகிரகங்களிலேயே அனைவரும் பயப்படக்கூடிய ஓர் கிரகம் என்றால் அது சனி பகவான் தான். இவர் என்ன தான் கோபக்காரர் என்றாலும், நீதி அரசர் மற்றும் மிகவும் வலிமையானவராக திகழ்பவர். இவர் ஒருவர் கர்மாவிற்கு ஏற்ற பலனைக் கொடுக்கக்கூடியவர். கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இப்படிப்பட்ட சனி பகவான் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று சூரிய பகவானுக்கும், சாயாவிற்கும் மகனாக பிறந்தார். இவர் பிறந்த நாள் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.இந்நாளில் சனி தோஷம் உள்ளவர்கள் சனி பகவானின் முக்கிய தலமான திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்திற்கு சென்று பரிகாரம் செய்வது நல்லது. அதோடு இந்நாளில் சனி பகவானை குளிர்விக்கும் சில சக்தி வாய்ந்த மந்திரங்களை உச்சரித்து வழிபட்டு வந்தால், சனி பகவான் எல்லா துன்பங்களையும் போக்கி நீண்ட ஆயுளைத் தருவார். மேலும் ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி உள்ளவர்களும் சனி பகவானுக்கு உரிய மந்திரங்களை சொல்லி வணங்கி வந்தால், சனி பகவானின் கருணை கிடைக்கும். இப்போது துன்பங்களைப் போக்கி, சனி பகவானின் அருளைப் பெற உதவும் சக்தி வாய்ந்த சனி மந்திரங்களைக் காண்போம்.
சனி பகவான் ஸ்லோகம்
“நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!”
இந்த ஸ்லோகத்தின் பொருள் என்னவென்றால், கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன் என்பதாகும்.
சனி பகவானின் மூல மந்திரம்
“ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ”
இந்த சனி மூல மந்திரத்தை 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும். இதனால் சனி பகவானை குளிர்விக்கலாம்.
சனி பரிகார ஸ்தோத்திரம்
“சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!”
இந்த சனி ஸ்தோத்திரத்தை சனி ஜெயந்தி அன்று மட்டுமின்றி, ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானை வணங்கும் போது சொல்லி வந்தால், சனி பகவானின் அருள் முழுமையாக கிட்டும்.
சனி காயத்ரி மந்திரம்
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனைச்சர ப்ரசோதயாத்!
ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!
ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!
குறிப்பு:
சனி தொடர்பான பிரச்சனைகள், சனி தசை அல்லது சனி புத்தி நடக்கும் போது, அனுமனை தினமும் வழிபடுங்கள். முக்கியமாக அனுமன் சாலிசா அல்லது அனுமன் ஸ்தோத்திரங்களை சொல்லுங்கள். மேலும் சனி தசையின் போது வால்மீகி ராமாயணத்தில் உள்ள பாலா காண்டத்தின், 30 ஆவது அத்தியாயத்தை தினமும் படிக்க வேண்டும்.