சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை எனில் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனிநபர் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கைகளை வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், தங்களின் விதிமுறை மற்றும் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து, இந்தியாவில் தனது டிஜிட்டல் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இது தொடர்பான வழக்கிலும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
முன்னதாக, புதிய விதிகளை ஏற்க டுவிட்டர், கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அவகாசம் கொடுத்திருந்தது. அதனை ஏற்று, அனைத்து நிறுவனங்களும் குறைதீர்க்கும் அதிகாரிகளையும் நியமனம் செய்து, மேற்கொண்டு பணிகளை செய்து வருகிறது. ஆனால், டுவிட்டர் நிறுவனம் மட்டும் ஏற்க மறுத்து வந்தது.
இந்நிலையில், புதிய சட்டங்களின்படி இந்தியாவில் அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை ஏற்காத பட்சத்தில் ட்விட்டர் நிறுவனம் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.