உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
உத்தர பிரதேச முதல் மந்திரியாக செயல்பட்டு வருபவர் யோகி ஆதித்யநாத். பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் நேற்று தனது 49-வது வயதில் அடியெடுத்து வைத்தார். நேற்று அவரது பிறந்தநாளுக்கு அம்மாநில அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட முக்கிய நபர்கள் யோகி ஆதித்யநாத்திற்கு தங்கள் டுவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை.
குறிப்பாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தலைவர்களுக்கு இதுபோன்ற பிறந்தநாளின் போது பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி பதிவிடுவார்.
ஆனால், நேற்று யோகி ஆதித்யநாத்தின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் எந்த வித வாழ்த்தும் பதிவிடவில்லை. இந்த சம்பவம் பா.ஜ.க.வினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2022-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மீது பா.ஜ.க. தலைமை அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் யோகி ஆதித்யநாத் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் வரும் தேர்தலில் யோகி ஆதித்யநாத்திற்கு பதிலாக வேறு நபரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உள்பட பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி பதிவிடாமல் நேரடியாக யோகி ஆதித்யநாத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதாக பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.