தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இயக்குநர் அமீர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் தீவிரமாக போராட்டக் களத்தில் பங்கு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜயை தொடர்ந்து தனுஷ் மற்றும் விக்ரம் இருவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள தனுஷ், ஜல்லிக்கட்டுக்காக இணைந்து போராடும் அனைத்து தமிழர்களால் பெருமை கொள்கிறேன். தமிழ் கலாச்சாரமான ஜல்லிக்கட்டை நடத்த ஒருங்கிணைந்துள்ளதால் வெற்றி நிச்சயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விக்ரம் கூறுகையில், “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தும் அனைத்து தமிழர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.