பெங்களூருவில் வசித்து வரும் வாலிபர் தன்னுடைய வீட்டில் உள்ள ஒரு பழைய சோபாவை விற்பனை செய்வதற்காக சோபாவை படம் பிடித்து ஆன்லைனில் பொருட்களை வாங்கி, விற்கும் நிறுவனத்தின் இணையதளத்தில் விற்பனைக்கு இருப்பதாக தெரிவித்திருந்தார்.
பெங்களூரு தெற்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அக்ஷய்நகரில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். அவர், தன்னுடைய வீட்டில் உள்ள ஒரு பழைய சோபாவை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக அந்த சோபாவை படம் பிடித்து ஆன்லைனில் பொருட்களை வாங்கி, விற்கும் நிறுவனத்தின் இணையதளத்தில் விற்பனைக்கு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த விளம்பரத்தில் தன்னுடைய செல்போன் எண்ணையும் அவர் கொடுத்திருந்தார். அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய ஒரு மர்மநபர், சோபா தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அதனை நானே வாங்கி கொள்கிறேன் என்று கூறினார். பின்னர் வாலிபரும், அந்த நபரும் பேசி விலையையும் இறுதி செய்தார்கள்.
இந்த நிலையில், ஆன்லைன் மூலமாகவே பணம் அனுப்புவதாகவும், இதற்காக வங்கியின் விவரங்கள், கியூ.ஆர். கோடுவை அனுப்பி வைக்கும்படி வாலிபரிடம் மர்மநபர் தெரிவித்தார். அதன்படி, அவரும் அனுப்பினார். அவ்வாறு அனுப்பிய சில நிமிடங்களில் வாலிபரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.1.15 லட்சத்தை மர்மநபர் எடுத்திருந்தார். வாலிபரின் வங்கி விவரங்கள் மூலமாக பணத்தை எடுத்து மர்மநபர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர்.