பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகி பிரதமர் பதவியை தனது மகன் அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவியை நாமல் ராஜபக்சவுக்கு வழங்குவது தொடர்பாக ராஜபக்ச குடும்பத்திற்குள் இரண்டு மாதங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரும் கலந்துரையாடலில் இணைந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்சவிற்கு அரசாங்கத்தில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மற்றொரு அமைச்சு பதவி வழங்குவதன் பின்னணியில் உள்ள விவாதம் இது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் மற்றொரு பொறுப்பை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கட்சியில் மிக முக்கிய பதவியை நாமல் ராஜபக்சவிற்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவிகளுக்கு மேலதிகமாக கட்சியில் கூடுதல் பொறுப்புகளை வழங்க பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து எப்போது விலகுவார், நாமல் ராஜபக்சவிடம் எப்போது பதவியை ஒப்படைப்பார் என்பது குறித்து தெளிவாக அறிவிக்கவில்லை என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.