கொழும்பு துறைமுகத்தில் எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் பற்றியெரிந்து மூழ்கிய நிலையில் 60 கிலோ மீற்றர் கடற்பிரதேசத்தில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி மீன்பிடி தடைக்கான பிரதேசத்தை குறைப்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக அப்பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நாரா நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானி கணபதிப்பிள்ளை அருளானந்தன் தெரிவித்தார்.
இன்று காலை தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல் பற்றியெரிந்த நிலையில் உடனடியாகவே அந்த பிரதேசத்தில் மீன்பிடிக்க 60 கிலோ மீற்றர் பரப்பளவுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கு காரணம் கப்பலில் உள்ள இரசாயன பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கலாம் என்ற அச்சமே காரணமாகும். எனினும் எதிர்வரும் 12 ஆம் திகதி இது தொடர்பில் ஆராய்ந்து தடை செய்யப்பட்ட அந்த கடற்பிரதேசத்தின் அளவை குறைக்கலாம் என நம்புகிறோம்.
அத்துடன் ஆமைகள், டொல்பின்கள் மற்றும் பிற கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குவது, குறித்த கப்பல் எரிந்து மூழ்கிய நிலையில் அந்த பகுதியில் இந்த உயிரினங்கள் இருந்து கப்பலில் இருந்த இரசாயன தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று கப்பல் தீப்பற்றி எரிந்த நிலையில் அதனுள் இருந்த எரிபொருள் சிலவேளைகளில் ஆவியாகி இருக்கலாம் என நம்புவதாகவும் அதனால் கடலில் எரிபொருள் கசிவுக்கான வாய்ப்புகள் குறைவாக இருக்காலம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கப்பலில் இருந்து வெளியேறும் பிளாஸ்ரிக்கழிவுகள் தாய்லாந்து பர்மா போன்ற கடற்பிரதேசங்களுக்கு அடித்து செல்லப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.