இந்த காலத்தில் யார் தான் வாட்ஸ்அப் யூஸ் பண்ணாம இருக்காங்க. எல்லோர் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது, ஸ்மார்ட்போன் இருப்பவர்கள் எல்லோரிடமும் வாட்ஸ்அப்பும் இருக்கிறது. இப்போது செய்தி என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்கள் போனில் இணைய சேவை இல்லையென்றாலோ, ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு வாட்ஸ்அப் பயன்படுத்தவில்லை என்றாலோ உங்கள் வாட்ஸ்அப் கணக்கு டெலிட் ஆகிவிடும்.
வாட்ஸ்அப், அதன் கேள்வி பதில்கள் பிரிவில், பாதுகாப்பைப் பராமரிப்பதற்கும், தரவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும், பொதுவாக 120 நாட்கள் அதாவது நான்கு மாதங்கள் வாட்ஸ்அப் கணக்கு எந்த பயன்பாடும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருந்தால் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதே போல் நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போனில் இணைய சேவை செயல்பாட்டில் இருந்தும் வாட்ஸ்அப் சேவையைத் தொடர்ந்து 45 நாட்களுக்குப் பயன்படுத்தாமல் இருந்தால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படுவதற்கு முன்பு பயனரின் சாதனத்தில் சேமிக்கப்பட்டிருந்த உள்ளடக்கம் சாதனத்திலிருந்து வாட்ஸ்அப் நீக்கப்படும் வரை அப்படியே இருக்கும். ஒரு பயனர் அதே சாதனத்தில் வாட்ஸ்அப்பை மேற்சொன்ன குறிப்பிட்ட நாட்களுக்குள் மீண்டும் பதிவுசெய்தால், சாதனத்தில் சேமிக்கப்பட்ட உள்ளடக்கம் மீண்டும் தோன்றும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.