கொரோனாவினால் நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தப் பட்டுள்ள நீண்ட பயணத்தடை காரணமாக அன்றாட கூலி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது பசி பட்டினியை போக்குவதற்கு சேற்று நீரில் மட்டி பொறுக்கி உணவு தேவையை பூர்த்தி செய்யும் நிலை காணப்படுகின்றது.
பயண தடை நடுத்தர குடும்பங்களையே அதிகமாக பாதித்துள்ள நிலையில் ஒழுங்கான தொழில் வாய்ப்பும் இல்லாமல் அத்தியாவசி பொருட்களின் விலையேற்றத்தினால் அன்றாட தொழிலில் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
பயணத்தடை ஒரு புறம் மக்களின் வாழ்வாதரத்தை நெருக்கி வரும் நிலையில் அதிகரித்த விலையில் மரக்கறிகள் விற்கப்பட்டு வருவதாலும் மீன்களை பெற்றுக்கொள்வதில் சிரமம் காணப்படுவதாலும் நடுத்தர குடும்பங்கள் உட்பட அனேகர் கடலாற்று பகுதியில் சேற்றுக்கு நடுவில் காணப்படும் மட்டியை சேகரித்து உணவு தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர் பலர் உணவுக்காகவும் இன்னும் சிலர் மட்டியில் இருந்து சேகரித்த சதைகளை விற்பனை செய்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகின்றனர்.
இதேவேளை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவானது, சமூர்த்தி பெறும் குடும்பங்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சமூர்த்தி பெறாத மற்றும் வறுமை கோட்டுக்கு உட்பட்ட அனேகர் மட்டியை உணவுக்காக சேகரித்து வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.