போலந்தில் முன்னாள் ஆஷ்விட்ஸ் வதை முகாம் அருகே குவியலாக மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் புதிய விசாரணைக்கு தூண்டியுள்ளது.
போலந்தின் Oswiecim நகருக்கு அருகே அமைந்துள்ள முன்னாள் ஆஷ்விட்ஸ் வதை முகாம் அருகே, சோலா நதிக்கரையில் உள்ளூர் மக்களால் 12 மண்டை ஓடுகளும் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவை முன்னாள் ஆஷ்விட்ஸ் வதை முகாம் தொடர்புடையவையா என பொலிசார் மற்றும் சிறப்பு அதிகாரிகள் குழு விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போரின் போது ஆஷ்விட்ஸ் வதை முகாம்களில் 1.1 மில்லியன் மக்களுக்கும் மேலாக கொல்லப்பட்டுள்ளனர். ஜேர்மானிய நாஜி படைகள் 1939ல் போலந்தின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி, வதை முகாம்களை நிறுவினர்.
பெரும்பாலும் யூதர்களே இந்த வதை முகாம்களில் சித்திரவதைக்கு இரையாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர். தற்போது சோலா நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தொடர்பில் தீவிர ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், வதை முகாம்களில் கொல்லப்படும் யூதர்கள் உள்ளிட்ட மக்களின் சடலங்கள் சோலா நதிக்கரையில் குவியலாக புதைக்கப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.