நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 303 ரன்னில் ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இதற்கிடையே, பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் இரண்டாவது டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 101 ஓவரில் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 81 ரன் எடுத்து அவுட்டானார். மார்க் வுட் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய டேனியல் லாரன்ஸ் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், ஹென்றி 3 விக்கெட்டும், படேல் 2 விக்கெட்டும், நீல் வாக்னர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், டேவன் கான்வே களமிறங்கினர்.
டாம் லாதம் 6 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய வில் யங் கான்வேயுடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். அணியின் எண்ணிக்கை 137 ஆக இருந்தபோது டேவன் கான்வே 80 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வில் யங் 82 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 76.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. ராஸ் டெய்லர் 46 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு 2 விக்கெட்டும், டேனியல் லாரன்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.