வார்த்தை களால் வர்ணிக்க முடியாத அழகிய பண்புகளையும் சிறந்த குணங்களையும் கொண்டவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மக்களின் இதயங்களின் ஆழத்தில், நபிகளாரின் கண்ணியம் வேரூன்றி இருந்தது. இறைத்தூதர் ஆவதற்கு முன்னரே அவர்களது வாழ்க்கை தூய்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருந்தது. இளமைப் பருவத்திலேயே ‘நம்பிக்கையாளர்’ (அல் அமீன்), ‘உண்மையாளர்’ (அஸ்ஸாதிக்) என்று மக்களால் அழைக்கப்பட்டார்கள். எதிரிகள்கூட அவர்களைக் குறை கூறியதில்லை. அவர்களுடைய பரம எதிரி அபூஜஹ்ல் ஒருமுறை, “முகம்மதே! நீர் கொண்டு வந்த மார்க்கத்தைத்தான் நான் பொய்யாகக் கருதுகிறேன். ஆனால் நீர் பொய்யர் அல்லர்” என்று கூறினான்.
ஒருமுறை ரோம் மன்னர் ஹிர்கல் (ஹெர்குலஸ்) அழைப்பின்பேரில், நபிகளாரின் எதிரிகளில் ஒருவரான அபூ சுபியான் அவரை அவரது அவையில் சந்தித்தார். அப்போது அபூசுபியானிடம், “இஸ்லாத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன்பு அவர் (முகம்மது நபி) பொய் பேசியுள்ளார் என்று நீங்கள் பழி சுமத்தியுள்ளர்களா?” என்று மன்னர் கேட்டார்.
அதற்கு அபூ சுபியான் பதில் அளிக்கையில், “அவ்வாறு அவர் ஒருபோதும் பொய் பேசியதில்லை” என்று பதில் அளித்தார்.
இதன் மூலம் மக்களின் நம்பிக்கைக்குரியவராகவும், வாய்மையாளராகவும் நபிகளார் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது புலனாகிறது. நாம் இறைவனையும் அவனது திருமறையையும் ஏற்றுக் கொள்வதற்கு அவர்களது வாய்மையும், வாழ்வின் தூய்மையும் மட்டுமே போதுமானதாகும். ஆட்சித் தலைவராகவும், ஆன்மிகத் தலைவராகவும் மகத்தான அதிகாரமும், செல்வாக்கும் பெற்றிருந்த நபிகளார், இறுதிக் காலம் வரை எளிமையாகவே வாழ்ந்தார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவின் ஆட்சியாளராக இருந்த நேரம். அவர்களைச் சந்திப்பதற்காக உமர் (ரலி) அவர்கள் செல்கிறார். அங்கே கண்ட காட்சியை உமர் விவரிக்கிறார். அதை நாமும் கேட்போம்.
“நபிகள் நாயகம் பாயின் மீது எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால்மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. தலைப்பகுதியில் தண்ணீர் வைக்கும் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன். ‘ஏன் அழுகிறீர்?’ என்று நபிகளார் கேட்டார்கள். ‘(பாரசீக மன்னர்) கிஸ்ராவும், (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும்போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே’ என்று நான் கூறினேன். அதற்கு நபிகளார், ‘இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தி அளிக்க வில்லையா?’ என்று திருப்பிக் கேட்டார்கள்”.
வலிமை மிக்க வல்லரசின் அதிபர் வாழ்ந்த வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் உண்மை நிகழ்வு இது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களை விட அதிகம் பணிவுடையவர்களாக இருந்தார்கள். மன்னர் வரும்போது அவர் முன்பு மக்கள் எழுந்து நிற்பதைப் போன்று தனக்கு முன் எழுந்து நிற்பதைத் தடை செய்தார்கள். நலிந்தோர்களையும் நோயாளிகளையும் நலம் விசாரிப்பதை அன்றாட நடவடிக்கையாக வைத்திருந்தார்கள். ஏழைகளோடு ஏழைகளாகச் சேர்ந்திருப்பார்கள். தோழர்களுடன் அவர் களில் ஒருவராக அமர்ந்திருப்பார்கள். அடிமைகள் விருந்திற்கு அழைத்தாலும் இன்முகத்தோடு ஏற்றுக் கொள்வார்கள்.
தனது காலணிகளையும் ஆடைகளையும் அவர்களே தைத்துக் கொள்வார்கள். தனது ஆடைகளை அவர்களே சுத்தம் செய்வார்கள். ஆட்டில் அவர்களே பால் கறப்பார்கள். உங்களில் ஒருவர் வீட்டு வேலைகளைச் செய்வது போன்று நபிகளாரும் தனது வீட்டில் வேலை செய்வார்கள்.
தோழர்களோடு தாமும் ஒருவராகப் பணிகளைப் பகிர்ந்து கொள்வார். ஒரு பயணத்தின்போது சமையல் வேலை தொடங்கியது. ஆளுக்கொரு வேலையில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது நபிகளார் விறகுகளைச் சேகரித்து வரப் புறப்பட்டார். இதை அறிந்த தோழர்கள், “இறைவனின் தூதரே! உங்களுக்கு ஏன் இந்தச் சிரமம்? நாங்களே இதைச் செய்து கொள்கிறோம்” என்றனர்.
உடனே நபிகளார், “உங்களால் செய்ய முடியும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் உங்களில் என்னைத் தனியே உயர்த்திக் காட்ட நான் விரும்பவில்லை. ஏனெனில் ஒருவர் தனது தோழர்களில் தனியாக வேறு படுத்திக் காட்டுவதை இறைவன் வெறுக்கிறான்” என்று கூறி விறகு சேகரிக்கச் சென்றார்கள்.
மக்கா மாநகருக்கு தென் கிழக்கே சுமார் எழுபது மைல் தூரத்தில் உள்ள ‘தாயிப்’ நகருக்கு இஸ்லாத்தை எடுத் துரைக்க, தன்னுடைய வளர்ப்பு மகன் ஜைது (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு நபிகளார் சென்றார்கள். அங்கு செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர் களைச் சந்தித்து இஸ்லாத்தைப் பற்றி எடுத்துக் கூறினார்கள். அவர்கள் நபிகளாரை கேலியும் கிண்டலும் செய்தனர். அதோடு அவர்கள் நிற்கவில்லை. சிறுவர்களை ஏவி நபிகளாரை கற்களாலும் சொற்களாலும் தாக்கினார்கள். இவ்வாறு பத்து நாட்கள் பாடாய்ப்படுத்தினார்கள். பதினோறாம் நாள் அவர்கள் இருவரும் தாயிப் நகரத்தைவிட்டு வெளியேறினார்கள். அப்போதும் அந்தக் கொடிய மனம் கொண்டோர் ஓட ஓட விரட்டினார்கள். அவர்கள் நபிகளாரை கல்லால் அடித்தார்கள். அவர்கள் உடலில் காயங்கள் ஏற்பட்டன. ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அருகில் தென்பட்ட ஒரு தோட்டத்திற்குள் இருவரும் தஞ்சம் புகுந்தனர். வேதனையைப் பொறுக்க முடியாமல் நபிகளார் கீழே சாய்ந்தார்கள். பக்கத்தில் இருந்த ஜைத் அவர்களைத் தாங்கியபடி, “நாசக்காரர்கள் நாசமடைய இறைவனைப் பிரார்த்தித்தால் என்ன?” என்று கேட்டார்கள்.
அதற்கு நபிகளார், “நான் மக்களிடம் அன்பு பாராட்டவும், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யவும் அனுப்பப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு வேதனையை வழங்குவதற்காக அனுப்பப்படவில்லை. இன்றில்லாவிட்டாலும் நாளை இவர்கள் நேர்வழியில் வருவார்கள். இவர்கள் வராவிட்டாலும் இவர் களுடைய வழித்தோன்றல்கள் நிச்சயம் இஸ்லாத்தை ஏற்பார்கள்” என்றார்கள்.
“நபியே! நிச்சயமாக நீர் மகத்தான நற்குணம் உடையவராகவே இருக்கின்றீர்” (திருக்குர்ஆன்-68:4) என்ற இறைக் கூற்றுக்கு ஏற்றவராக நபிகளார் விளங்கினார்கள்.
பாத்திமா மைந்தன்