இன்றைய காலகட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ என்ற பெயர் பள்ளி செல்லும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும். அவ்வளவு பிரபலம் இந்த பெயர். போனில் சின்சான், ஜாக்கிச்சான் பார்த்தால் தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்கும் குழ்நதைகள் எல்லோர் குடும்பத்திலும் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை என்று சொல்லலாம். குழ்நதைகளை விடுங்க, பெரியவர்களே கூட ஒரு நாள் இன்டர்நெட் இல்லையொயென்றாலும் வேலையே ஓடாது. ஆனால் இதற்கெல்லாம் காரணம் என்ன மலிவு விலையில் இணைய சேவை கிடைப்பது தான்.
அதுவும் இலவச அழைப்பு சேவை கிடைப்பதால் committed couples இரவு பகல் பாராமல் கடலை போடுவது முதல் ஊரிலிருக்கும் தாத்தா பாட்டியிடம் மணிக்கணக்கில் பேச கிடைக்கும் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களால் எக்கச்சக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கெல்லாம் காரணம் என்ன என்று கேட்டால் பெரும்பாலோரிடமிருந்து வரும் பதில், “அதான் ஜியோ சிம் இருக்கே” என்பதுதான்.
இப்படி மக்களின் மனதை கவர்ந்து வைத்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோவிற்கு வயது என்னமோ ஐந்து தான். ஆனாலும், உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் தனது சேவைகளை அறிமுகப்படுத்தியது, மேலும் இது நாட்டில் தற்போது 400 மில்லியன் பயனர்கள் உடன் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக மாறியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இவ்வளவு பிரபலமாக காரணம் என்ன?
இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இலவச குரல் அழைப்பு சேவையுடன் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. அந்த நேரத்தில் முன்னணி நிறுவனங்களாக இருந்த ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா போன்ற அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் குரல் அழைப்புகளின் மூலம் மட்டுமே மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டிக்கொண்டிருந்த சமயத்தில் ஜியோவின் இந்த அறிவிப்பு தொழில்துறைக்கு புதியதாகவும் மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருந்தது.
அதுதவிர, ஆரம்பத்தில் இலவச இணைய சேவையையும் ஜியோ வழங்கியது. 50 MB, 100 MB என பார்த்து பார்த்து பயன்படுத்திக் கொண்டிருந்த மக்களுக்கு தினமும் 1 GB இலவச இணைய சேவை எல்லாம் ஒரு கனவு போல இருந்தது. தவிர்க்கவே முடியாத அளவுக்கு பல சலுகைகளை வாரி வழங்கியதால் பெரும்பாலான பயனர்கள் ஜியோ சிம் வாங்க ஆர்வமாக வந்தனர்.
இந்த சேவைகள் எல்லாம் மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பேரிடியாக வந்தன. பயனர்கள் எல்லோரும் ஜியோ நெட்வொர்க்கிற்கு தாவுவதைக் கண்ட மற்ற நிறுவனங்கள் வேறு வழியே இல்லாமல் விலைகளைக் குறைத்து ஜியோ வழங்குவதை போன்றே திட்டங்களை வழங்க தொடங்கின.
அதன் பிறகு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது குறிப்பிட்ட கால இலவச சேவைகளை முடித்துவிட்டு கட்டணத் திட்டங்களை அறிவித்தது. அவ்வளவுதான் இனிமேல் ஜியோ சிம் எல்லாம் தூக்கிபோட்டுவிடுவார்கள் என்று பலரும் கூறினர். ஆனால், ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியாவை விட ரிலையன்ஸ் ஜியோவின் திட்டங்கள் 20 முதல் 30 சதவீதம் மலிவானவை என்பதால் மேலும் பல மக்கள் ஜியோ சிம் பயன்படுத்த தொடங்கினரே தவிர யாரும் ஜியோ வேண்டாம் என்று போனதாக தெரியவில்லை.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் நெட்வொர்க்கில் அதிக அளவிலான முதலீடுகள் காரணமாக இந்திய தொலைத் தொடர்புத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. கூடுதலாக, அதன் டிஜிட்டல் சேவைகள், கேமிங், ஜியோமீட் மற்றும் ஜியோ பேஜஸ் போன்ற பல சேவைகளை இலவசமாக தொலைதொடர்பு நிறுவனம் தொடர்ந்து அறிமுகம் செய்வதால் புதிய பயனர்களுடன் தொடர்ந்து வெற்றி முகத்துடனே காணப்படுகிறது.
கூடுதலாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள முதல் தொலைத் தொடர்பு நிறுவனமாகவும் உள்ளது இதற்காக கூகிள், குவால்காம் நிறுவனங்களுடனும் கூட்டணி அமைத்துள்ளது.
அன்று 50 MB, 100 MB இன்டர்நெட் பயன்படுத்தவே யோசித்த நம்மை இன்று தினமும் GB கணக்கில் பயன்படுத்த செய்து டிஜிட்டல் உலகில் பல சாதனைகள் செய்ய செய்த பெருமைக்கெல்லாம் ஜியோவின் வளர்ச்சியில் பங்குண்டு என்பது மறுக்கவே முடியாத உண்மை.