கோவை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்ததும் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, கோவை ஆட்சியராக இருந்த நாகராஜன், நில நிர்வாக ஆணையராகவும், அரியலூர் ஆட்சியர் ரத்னா, சமூக நலத்துறை இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராகவும், தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல, நாகை ஆட்சியர் பிரவீன் நாயர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநராகவும், விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை, வேளாண்துறை இயக்குநராகவும், வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் கூட்டுறவுத்துறை பதிவாளராகவும், திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் பதிவுத்துறை ஐஜியாகவும், திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா, நகராட்சி நிர்வாக ஆணையராகவும் இடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.