தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்து நாளை முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டு உள்கட்டமைப்பு வசதிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மாவட்ட மைய நூலகத்தில் இதுவரை நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்தும், நூலகம் மூலம் பயன் பெற்ற மாணவர்கள் குறித்தும் அதிகாரிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நூறாண்டு பழமையான கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் வருகை பதிவேடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளையும் ஆய்வு மேற்கொண்டு, பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு வடநேரே மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் மாணவ-மாணவிகளிடம் கல்வி கட்டணமாக நீதிமன்றம் உத்தரவிட்ட 75 சதவீதம் கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். உயர்கல்வி சேர்க்கைக்கான பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான முடிவுகளை எடுப்பதற்கு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் பற்றி சுப்பிரமணிய சுவாமி கூறியது பற்றி பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு, அவரைப் பற்றி பேச ஒன்றுமில்லை என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்து நாளை முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பள்ளி கட்டணம் குறித்து நீதிமன்றம் உத்தரவு படி இந்தாணடு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும், பள்ளிகளில் தவறு நடந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் கூறியுள்ளார். நீட் தேர்வுவை பொறுத்துவரை ஏ.கே ராஜன் கமிட்டி அடிப்படையில் நீட் தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.