பாகிஸ்தான் அரசு பரிசாக அனுப்பிய மாம்பழங்களை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் ஏற்க மறுத்து, திருப்பி அனுப்பியுள்ளனர்.
பாகிஸ்தான் அரசு அதன் ‘மாம்பழ ராஜதந்திர’ முன்னெடுப்பின் (Mango diplomacy) ஒரு பகுதியாக, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், கனடா, இலங்கை, எகிப்து உள்ளிட்ட 32 உலக நாடுகளின் தலைவர்களுக்கு கடந்த புதைக்கிழமை பெட்டி பெட்டியாக மாம்பழங்களை பரிசாக அனுப்பியது.
பாகிஸ்தானின் ஜனாதிபதி டாக்டர் ஆரிஃப் ஆல்வி சார்பாக ‘சவுன்சா’ வகை மாம்பழங்கள் அனுப்பப்பட்டதாக தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் அவற்றின் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மேற்கோளிட்டு அந்த மாம்பழங்களை ஏற்க மறுத்து, திருப்பி அனுப்பியுள்ளனர்.
கனடா, நேபாளம், எகிப்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளும் பாகிஸ்தான் ஜனாதிபதியிடமிருந்து வந்த அந்த பரிசை ஏற்க மறுத்துள்ளன. மேலும் அதற்காக வருத்தமும் தெரிவித்துள்ளன.
இதனைத் தவிர்த்து ஈரான், வளைகுடா நாடுகள், துருக்கி, பிரித்தானியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ரஷ்யாவிற்கும் மாம்பழ பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பரிசை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது, ஆனால் இது குறித்து பாரிசிலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.