விண்வெளி பயணத்தின்போது ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் மேலும் ஒருவர் இணையலாம் என்பதால் அந்த இருக்கைக்கான ஏலத்தை புளூ ஆரிஜின் நிறுவனம் அறிவித்தது.
உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெப்-பெசோஸ் புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை கடந்த 2000-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.
மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் தனது முதல் விண்வெளிப் பயணமாக ஜூலை 20-ம் தேதி நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தை விண்ணில் செலுத்துகிறது.
இதில் ஜெப்-பெசோஸ் தனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு பயணிக்கிறார். இந்தப் பயணத்தின்போது ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் மேலும் ஒருவர் இணையலாம் என்பதால் அந்த இருக்கையை புளூ ஆரிஜின் நிறுவனம் ஏலம் விட்டது.
சுமார் 140 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். ஒரு மாத காலமாக நடந்து வந்த ஏலத்தில் 5 மில்லியன் டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36 கோடியே 61 லட்சம்) குறைவாகவே ஏலம் கேட்கப்பட்டது.
இந்நிலையில், ஏலத்தின் கடைசி நாளான நேற்று முன்தினம் இந்தத் தொகை 5 மடங்காக உயர்ந்தது. அதன்படி ஜெப்-பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் விண்வெளி செல்வதற்கான இருக்கையை ஒருவர் 28 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.205 கோடி) ஏலம் கேட்டார்.
அதற்கு மேல் யாரும் ஏலம் கேட்காத நிலையில், அந்த இருக்கையை அவருக்கு ஒதுக்கி புளூ ஆரிஜின் நிறுவனம் ஏலத்தை முடித்து வைத்தது. ஆனாலும், ஏலம் எடுத்த நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.