யாழில் இரகசிய திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை புகைப்பட பிடிப்பாளரின் புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தும் நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வடமராட்சி , கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் உள்ள காரணவாய் மேற்கில் அமைந்துள்ள மணப்பெண் வீட்டில், சுகாதார பிரிவின் அனுமதியின்றி திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கட்டுவனை சேர்ந்த மணமகன் குடும்பம் மற்றும் உறவினர்கள் மணப்பெண் வீட்டிற்கு சென்று திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் இரு வீட்டாருமாக 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து குறித்த வீட்டிற்கு பொலிஸார் சென்ற போது திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த உறவினர்கள் பலரும் தப்பி ஓடி இருந்தனர். மணமக்கள் வீட்டார் , குருக்கள் , புகைப்பட பிடிப்பாளர்கள் உள்ளிட்ட சிலரை பொலிஸார் மடக்கி வைத்திருந்தனர்.
அத்துடன் அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்திருந்த சுகாதார பிரிவினர் மணமக்கள் குடும்பம் உள்ளிட்ட பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
அத்துடன் புகைப்படப்பிடிப்பாளர்களிடம் இருந்து புகைப்படம் மற்றும் காணொளிகளை பெற்று நிகழ்வில் கலந்து கொண்ட ஏனையவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.