ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியை பின்னுக்கு தள்ளியுள்ளது நியூசிலாந்து அணி.
ஐசிசி அவ்வப்போது அணிகள், வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது வெளியிடப்பட்டிருக்கும் டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் இருந்த 2வது இடத்துக்கு சரிந்துள்ளது.
அதே போல 2வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த வெற்றியை தொடர்ந்து 123 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியா (121 புள்ளிகள்) இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியா (108) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இதேபோல இங்கிலாந்து 4-வது இடத்தையும், பாகிஸ்தான், 5 வது இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் 6வது இடத்தையும், தென் ஆப்பிரிக்கா 7வது இடத்தையும், இலங்கை 8-வது இடத்தையும், வங்கதேசம் 9வது இடத்தையும், ஜிம்பாப்வே 10வது இடத்தையும் பிடித்துள்ளன.
இப்போது டெஸ்ட் தொடர் வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை சவுத்தாம்டன் நகரில் நடைபெற இருக்கிறது.