கொரோனா வைரஸ் 2-வது அலையின் போது கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி, தொல்லியல்துறை சுற்றலா தலங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கொரோனா நோய் பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இதைப்போல மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மகால், செங்கோட்டை உள்ளிட்ட நினைவுச்சின்னங்களும் மூடப்பட்டன.
2-வது அலையின்போது கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி, தொல்லியல்துறை சுற்றலா தலங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதலில் மே மாதம் 15-ந்தேதி வரை என அறிவிக்கப்பட்டு பின்னர் ஜூன் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தற்போது கொரோனா நோய்த்தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் கடைகள், ஓட்டல்கள் திறப்பு, போக்குவரத்து இயக்கம் போன்ற சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதைப்போல மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டு தலங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் சுமார் 3,700 சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை நாளை முதல் (புதன்கிழமை) திறக்க தொல்லியல்துறை உத்தரவிட்டு உள்ளது.
இந்த திறப்பு நடவடிக்கை மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய நிர்வாக உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டது என்றும், திறக்கப்படும் சுற்றுலா தலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் துல்லியமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.