கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து, சென்னையில் உள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள் நாகராஜன், வெங்கட்ராமன் உட்பட 3 பேர் நேரில் ஆஜராகினர். ஆனால், சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் ஆஜராகவில்லை. சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறி அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜராகினர்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கியுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்துள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான தனிப்படையினர் டேராடூன் விரைந்துள்ளனர்.
சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.