ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்து தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தொடங்கி விடிய, விடிய நடைபெற்ற போராட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதுதவிர பல்வேறு மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராடி வருகின்றனர். மாணவர்களின் இந்த தன்னிச்சையான போராட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பல்கிப் பெருகி வருகிறது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசு உறுதி அளிக்கும்வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்கள் சந்தித்து பேசியபோது, இந்த விஷயத்தில் அரசு தரப்பில் உறுதி அளிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி போராட்டத்தைக் கைவிட மறுத்து விட்டனர்.
இந்நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இதுபற்றி பேச உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் பண்டைய பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றின் பிரதிபலிப்பே ஜல்லிக்கட்டு என்பது ஒவ்வொரு தமிழனின் எண்ணமாகும். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் உணர்வுகளோடு ஒன்றிணைந்தது ஜல்லிக்கட்டு. எனவே தான், ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில் தங்களது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில் மாணாக்கர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் உணர்வுகளை உணர்வதோடு மட்டுமல்லாமல், அந்த உணர்வின் அங்கமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
எனவே தான், ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென பிரதமரையும், மத்திய அரசையும் தமிழக அரசு தொடர்ந்து வற்புறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது.
தற்போது ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், மாணாக்கர்கள் ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என்பதிலும், அதன் மூலம் தமிழகத்தின் பாரம்பரியம் காக்கப்படவேண்டும் என்பதிலும் எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை.
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்படுவதற்கு ஏதுவாக நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கைகளை எடுத்தது தமிழக அரசு தான். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ஜல்லிக்கட்டை தடை செய்யக் கூடாது என்பதற்கான வலுவான வாதங்களை தமிழக அரசு எடுத்து வைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நமக்கு சாதகமாக அமையும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.
ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் எனில், உச்சநீதிமன்றம் நமக்கு சாதகமான தீர்ப்பினை வழங்கிட வேண்டும். இந்த தீர்ப்பிற்கு முன்னதாகவே ஜல்லிக்கட்டு நடத்திடவேண்டுமெனில் அதற்குரிய சட்ட திருத்தத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. மாநில அரசு இதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
நமது உரிமைகளை நிலைநாட்ட, பாரம்பரியத்தை காத்திட, உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்திட, அறவழியில் மாணாக்கர்களும் பொதுமக்களும் மேற்கொண்டுள்ள போராட்டங்கள் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. தமிழர்களின் உணர்வுகளோடு ஒன்றியுள்ள தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்திடும் என்ற உத்தரவாதத்தினை நான் அளிக்கிறேன்.
நாளை (19.1.2017) காலை புதுடெல்லியில் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்திட அவசர சட்டத்தினை உடனே பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.