2021 ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினம் வரப்போகிறது. யோகா என்பது நமது உடலையும், மனதையும் அழுத்தமின்றி அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பழங்காலம் முதலாக செய்யப்படும் வரும் ஒரு பழங்கால உடற்பயிற்சி ஆகும். யோகா செய்வதால் ஒருவர் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். அதோடு யோகா செய்வதற்கு வயது வரம்பு ஏதும் இல்லை. யார் வேண்டுமானாலும், யோகாவை செய்யலாம். இத்தகைய யோகாவை கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒருவர் தினமும் வீட்டிலேயே செய்து வந்தால், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதோடு, வைரஸை எதிர்த்துப் போராடத் தேவையான நோயெதிர்ப்பு சக்தியை பராமரிக்க முடியும்.ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. நீங்கள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக வலிமையாக்க நினைத்தால், ஒருசில யோகாசனங்களை தினமும் செய்து வாருங்கள். கீழே ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த யோகாசனங்களை தினமும் காலையில் எழுந்ததும் செய்து வந்தால், உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் மேம்படும்.
அனுவிட்டாசனா (Anuvittasana)
அனுவிட்டாசனா என்பது நின்று கொண்டு பின்னோக்கி வளையும் யோகாசனம் ஆகும். இந்த ஆசனம் அட்ரினல் சுரப்பியில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதோடு, சுவாச மண்டலத்தை நன்கு திறக்க உதவுகிறது. இந்த யோகாசனத்தின் போது சுவாசப் பாதை வழியாக ஆழமாக சுவாசிப்பது, குளிர் காலத்தில் நுரையீரலுக்கு மிகவும் நல்லது.
பிராணயாமா (Pranayama)
பிராணயாமா என்பது ஒரு மூச்சுப் பயிற்சி ஆகும். பொதுவாக ஆழ்ந்த சுவாசம் மன அழுத்த அளவைக் குறைத்து, மனதில் ஏற்படும் பதட்டத்தை தடுத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இது இரைப்பை பிரச்சனைகள், ஆஸ்துமா, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி ஆகியவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே அடுத்த முறை உங்களுக்கு தாங்க முடியாத தலைவலி வந்தால், மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளி விடுங்கள். இதனால் நல்ல பலனை விரைவில் பெறலாம்.
பரிவர்த உத்கடாசனா (Parivrtta Utkatasana)
பரிவர்த உத்கடாசனா என்பது நாற்காலியில் அமர்வது போன்ற நிலையில் இருந்து பக்கவாட்டில் திரும்பி வணக்கம் சொல்லும் நிலையாகும். இந்த யோகாசனத்தில் உடலைத் திருப்புவது மற்றும் மூச்சு பயிற்சியும் அடங்கி இருப்பதால், இது சிறுநீரகங்கள் மற்றும் செரிமான உறுப்புக்களை நச்சுத்தன்மையடையச் செய்வதற்கான சிறந்த வழியாகும். உடலைத் திருப்பும் போது, அது சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவி, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
திரிகோணாசனா (Trikonasana)
திரிகோணாசனா என்பது முக்கோண நிலையில் நின்று செய்யும் ஆசனமாகும். இதை முக்கோணாசனா என்றும் அழைப்பர். இந்த ஆசனம் உள்ளுறுப்புக்களை மசாஜ் செய்ய உதவுகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது நுரையீரலின் காற்றுப் பாதையையும் சுத்தம் செய்கிறது. ஆனால் இந்த ஆசனம் செய்யும் போது நன்கு ஆழ்ந்த சுவாசத்தை மேற்கொண்டால் மட்டுமே நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கருடாசனம் (Garudasana)
கருடாசனம் என்பது கழுகு நிலை ஆசனமாகும். இந்த யோகாசனம் தசைகளை வலுப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், நுரையீரலைச் சுற்றியுள்ள திசுப்படலத்தை நீட்டிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் இந்த ஆசனம் இடுப்பில் உள்ள அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.