தாய்ப்பாலில் அதிசயிக்கத்தக்க ஆற்றல் படைத்த இரசாயனப் பொருள் இருக்கிறது. அது பிறந்த குழந்தையின் செரிமான உறுப்புக்களை பாதுகாக்கவும் குறைகளைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது. இந்த தாதுப் பொருள் குழந்தை பிறந்தவுடன் சில நாட்களுக்குச் சுரக்கின்ற சீம்பாலில் மிக அதிக அளவில் இருக்கிறது.
இது குழந்தையின் குடல் பகுதிகளை மற்ற அமிலச்சுரப்பினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் குழந்தை இனிமேல் சாப்பிடப்போகும் உணவுகளை ஏற்றுக் கொள்ளும் விதமாக பக்குவப்படுத்துகிறது. தாய்ப்பால் மற்ற உணவுகளைப் போல் அல்லாமல் முழுவதும் ஜீரணம் ஆகிவிடும்.
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு வலுப்படுகிறது. மனஅமைதி மகிழ்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. கையில் எடுத்து மார்போடு அணைத்து பால் கொடுப்பதன் மூலமாக குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்ச்சி ஏற்பட்டு அது மனநிறைவோடு காணப்படுகிறது.
குழந்தைகள் தாயின் மார்பில் சப்பி பாலைக் குடிப்பதால் அதன் கன்னம் மற்றும் தாடை எலும்புகள் வலுவடைகின்றன. அதிக கால்சியம் சத்து நிறைந்த தாயின் பால் பல் மற்றும் எலும்பு வளர்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் ஆகியவை அரிதாகவே ஏற்படுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் தொற்றுநோய்கள் எளிதில் ஏற்படுவதில்லை. தாய்ப்பாலில் மட்டுமே பொலி அன்சேசுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பசும்பாலில் இல்லாத இந்த அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன.
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள் இருப்பதைப் போல தாய்க்கும் நன்மைகள் இருக்கின்றன. முதலாவது தாய் கருத்தரிப்பதை இயற்கையாக பெரும்பாலானவர்களுக்கு தள்ளி வைக்கிறது. மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் வருவதை தவிர்க்கமுடியும்.
கர்ப்பகாலங்களில் அதிகமாக சாப்பிட்ட தாயின் உடல் பருமனை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகிறது. கர்ப்பபையை சுருங்கச் செய்து மீண்டும் இயல்பான நிலைமைக்கு கொண்டு வருகிறது. பசும்பாலைவிட தாய்ப்பால் பலவிதங்களில் சிறந்தது. இதைக் காய்ச்ச வேண்டிய தேவையில்லை.
எப்போதும் பயன்படுத்தலாம். குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் சரியான விகிதத்தில் அமைந்திருக்கின்றன. புட்டிப்பாலுக்கு ஆகும் செலவைவிட ஒரு தாய் நல்ல சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட்டு அதன்மூலம் குழந்தைக்குப் பால் கொடுக்கின்றபோது ஆகும் செலவு குறைவானதுதான்.
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் மனவளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் மிகவும் நன்றாக இருக்கிறது. இவை அனைத்தையும் விட குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் பாசப்பிணைப்பு அதிகமாகிறது.
பால் கொடுத்துக் கொண்டே இருந்தால் தான் பால் அதிகமாக சுரக்கும். ஒவ்வொரு மாதமும் குழந்தையின் தேவைக்கேற்ப பாலில் சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உற்பத்தியாகின்றன.