`மதுரை சம்பவம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் யுரேகா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `சிவப்பு எனக்கு பிடிக்கும்’. பாலியல் குற்றங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், `போராளி’ பட புகழ் சாண்ட்ரா எமி நடித்துள்ளார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்போரேஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அமிஷ் யுவானி இசையமைத்துள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாது, வடமாநிலங்களிலிருந்தும் வேலைதேடி சென்னைக்கு வரும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் தங்களது உணர்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். இதனை தடுக்க பாலியல் கல்வியை ஊக்குவித்து ஆபாசங்களின்றி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் ஐடி நிறுவன பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் நடந்து வருகிறது. இதுபோன்ற குற்றசெயல்களை தடுக்க, சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை தணிக்கைகுழு பாராட்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற குற்ற செயல்களை தடுக்க சென்னையில் சிவப்பு விளக்குப் பகுதியை உருவாக்குவது போன்ற காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி 20-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் இயக்குநர் யுரேகாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம்.