வடக்கு மாகாணத்தில் பணியாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கையை ஏற்று கொரோனா நிதியாக 2 கோடியே 38 இலட்சம் ரூபா நிதியினை அன்பளிப்புச் செய்துள்ளனனர் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 10.06.2021 அன்று கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக ஆளுநர் அலுவலகத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக 17.06.2021 அன்று வழங்கிய தகவலில் மேற்படி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிதியில் 30 இலட்சம் ரூபா தேசிய கொவிட் 19 நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் மிகுதி 2 கோடியே 8 இலட்சம் ரூபா பிரதி பிரதம செயலாளர் ( நிதி) அலுவலக வங்கி கணக்கில் வைப்பில் உள்ளது என்றும் குறித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சின் செயலாளர்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் கொவிட் 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருமானம் இழந்து வாழ்வாதாரம் குன்றி நலிவடைந்து வாழ்விடங்களும் இன்றி இருக்கின்ற குடும்பங்களுக்கு ஒரு பயனாளிக்கு 9 இலட்சம் ரூபா படி 20 பயனாளிக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கும் அவ்வாறே ஒரு பயனாளிக்கு 140000.00 ரூபா படி 20 பயனாளிகளுக்கு மலசல கூடங்கள் அமைப்பதற்கும் வழங்கப்பட்டு வருகிறது என அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது