மோர் குழம்பு என்றாலே முதலில் தேர்ந்தெடுக்கும் காய் வெண்டைக்காயை ஆக தான் இருக்கும். வெண்டைக்காய் சேர்த்து செய்த மோர் குழம்பு அவ்வளவு அட்டகாசமான ருசியில் இருக்கும்.
இப்போது எப்படி ருசியான வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்….
தேவையான பொருட்கள்
- மல்லி – இரண்டு டேபிள் ஸ்பூன்
- கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
- துவரம்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
- வெண்டைக்காய் – 100 கிராம்
- தேங்காய் துருவல் – கால் கப்
- பச்சை மிளகாய் – இரண்டு
- மிளகு – அரை ஸ்பூன்
- சீரகம் – அரை ஸ்பூன்
- இஞ்சி – ஒரு துண்டு
- மஞ்சள் தூள் – சிட்டிகை அளவிற்கு
- சின்ன வெங்காயம் – நான்கு
- தயிர் – 2 கப்
- சமையல் எண்ணெய் – நான்கு டேபிள் ஸ்பூன்
- கடுகு – கால் டீஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- வர மிளகாய் – ரெண்டு
- பெருங்காயத்தூள் – சிட்டிகை அளவிற்கு
- உப்பு – தேவையான அளவிற்கு
செய்முறை
முதலில் துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மல்லி ரெண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து ஒருமுறை நன்கு தண்ணீரில் அலசிவிட்டு ஊற வையுங்கள்.
அதற்குள் நாம் வெண்டைக்காயை வதக்கி வந்து விடலாம். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெண்டைக்காய்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஐந்து நிமிடம் இப்படி வதக்கினால் வெண்டைக்காயில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும்.
பாதி வதங்கிய பின் உப்பு சேர்த்து மீண்டும் வதக்கினால் பிசுபிசுப்பு தன்மை விரைவாக போய் சுருள வதக்கி விடும். அடுத்து, மிக்ஸி ஜாரில் அரை கப் அளவிற்கு தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதனுடன் பச்சை மிளகாய் 2, அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் மிளகு, ஒரு சிறு துண்டு இஞ்சி மற்றும் நாம் தனியாக ஊற வைத்துள்ள பருப்பு வகைகளை தண்ணீரை வடிகட்டி சேர்த்துக் கொள்ள கொண்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் அரைக்கும் பொழுது தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து பார்த்து கெட்டியாக பார்த்து அரைக்க வேண்டும். கலவை அரைபட்டதும் இறுதியாக கொஞ்சம் மஞ்சள் தூள், மற்றும் நான்கு சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
எந்த அளவிற்கு இந்த கலவை உங்களுக்கு கிடைக்கிறதோ! அதே அளவிற்கு கெட்டியான தயிரை இரண்டு மடங்காக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் குழம்பு ருசி கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு கப் அளவிற்கு இந்த கலவையை எடுத்துக் கொண்டால், 2 கப் அளவிற்கு கெட்டியான தயிரை சேர்த்து இரண்டையும் நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள்.
அதில் 4 டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கடுகைப் போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் கருவேப்பிலை, வரமிளகாயை கிள்ளி போடுங்கள். அதன் பின்னர் பெருங்காயத்தூள் சேர்த்து, வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயைப் போட்டு மீண்டும் லேசாக வதக்கவும்.
பின்னர் அடுப்பை முற்றிலுமாக குறைத்துக் கொள்ளுங்கள். இப்போது கலந்து வைத்துள்ள தயிரை அப்படியே ஊற்றுங்கள். அடுப்பை அதிகமாக வைத்திருந்தால் தயிர் திரிந்து விடும் அபாயம் உண்டு. குறைந்த தீயிலேயே கொதிக்க விடுங்கள்.
அதிகம் கொதிக்க வேண்டிய அவசியமில்லை, நுரை பொங்க லேசாக சூடு ஏறினால் போதும். பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து விடுங்கள், அவ்வளவுதான் ருசியான வெண்டைக்காய் மோர் குழம்பு வித்தியாசமான சுவையுடன் தயாராகி விட்டிருக்கும்.
இந்த முறையில் நீங்களும் ஒருமுறை மோர்க்குழம்பு செய்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.