பறக்கும் சீக்கியர் என அழைக்கப்பட்ட இந்திய விளையாட்டு வரலாற்றில் ஜாம்பவானாக விளங்கிய முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் மரணமடைந்துள்ளார்.
நவீன பயிற்சி வசதிகள் இல்லாத காலகட்டத்தில், இந்தியாவின் மூவர்ணக் கொடியை சர்வதேச அரங்குகளில் பறக்கவிட்ட ஜாம்பவான்.
1960ல் ரோம் நகரத்தில் முன்னெடுக்கப்பட்ட போட்டியில் மில்கா சிங் நான்காம் இடத்தை கைப்பற்றினாலும், அன்று அவர் பதிவு செய்த 45.73 நொடிகள் என்பது தொடர்ந்து 40 ஆண்டுகள் தேசிய சாதனையாக நீடித்தது.
அதே ஆண்டில் டெல்லியில் நடந்த போட்டிகளில் 5 சாதனைகள் பதிவு செய்தார். தொடர்ந்து பாகிஸ்தானில் நடந்த போட்டியில் வெற்றி. அப்போதைய பாகிஸ்தான் ஆட்சியாளரான அயூப்கான் என்பவரே பறக்கும் சீக்கியர் என முதன் முறையாக அழைத்தவர்.
1956, 1960, 1964 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்ற மில்கா சிங், 2001ல் தமக்கு வழங்கப்பட்ட அர்ஜுனா விருதை ஏற்க மறுத்தார். 1961ல் முதல்முறையாக அர்ஜுனா விருது அறிமுகம் செய்யப்பட்டபோதே தமக்கு அளித்திருக்க வேண்டும் என வாதிட்டார்.
90 வயதான மில்கா சிங்கிற்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த மாதம் இவரது மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்தார். இந்த நிலையில் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
அவருக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் விளையாட்டு உலகமும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது.