இஸ்ரேலில் கடந்த 6-ந் தேதி முதல் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இஸ்ரேலில் 16 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 6ந்தேதி முதல் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இஸ்ரேலில் மொத்த கொரோனா பாதிப்புகள் 8.39 லட்சத்திற்கும் சற்று கூடுதலாக உள்ளன. 6 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 55 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், அந்நாட்டில் 2 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. டெல் அவிவ் நகரில் இருந்து வடக்கே 60 கி.மீ. தொலைவில் உள்ள பைனையமீனா என்ற நகரில் உள்ள பள்ளிகளில் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
மொத்தம் 45 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கிறது என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.