கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கப்பட்டு உள்ளது. லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து, 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். அப்போது எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார்.லைகா புரோடக்சன்ஸ் நிறுவனம் தற்போது கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தையும், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் பொன்னியின் செல்வன் படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.