என் மகன் என்னை கவனிப்பதா அல்லது மனைவி குழந்தைகளை கவனிப்பதா என்ற குழப்பத்தில் இருக்கிறார். தனது மகன் படும்பாட்டை பார்க்க மனமின்றி தன்னை முதியோர் இல்லத்தில் சேர்க்க கோரி மூதாட்டி போலீஸ் நிலையத்தை நாடினார்.
அவுரங்காபாத் மாவட்டம் பண்டலிக் நகர் பகுதியை சேர்ந்த 60 வயது பெண் கிரண் பர்திகர். இவரது கணவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பின்னர் தையல் வேலை செய்து தனது மகனை வளர்ந்தார்.
இதைதொடர்ந்து இவரது மகன் வாழ்வாதாரத்திற்காக புனே கோர்ட்டு அருகே புத்தக கடை தொடங்கி நடத்தி வந்தார். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக இவரது தொழில் முடங்கியது.
இதற்கிடையே கிரண் பர்திகர் மருமகளுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனியாக வசிக்க தொடங்கினார். அவரது மகன் தாய்க்கு அறை எடுத்து கொடுத்து உணவுக்கு ஏற்பாடு செய்தார்.
ஆனால் நாளுக்கு நாள் அவரின் நிதி நிலை மோசமானது.
தனது மகன் படும்பாட்டை பார்க்க மனமின்றி தன்னை முதியோர் இல்லத்தில் சேர்க்க கோரி கிரண் பர்திகர் போலீஸ் நிலையத்தை நாடினார்.
அவரின் நிலையை கேட்டு அறிந்துகோண்ட போலீசார் அவருக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு புது துணி எடுத்து கொடுத்ததுடன், முதியோர் இல்லம் ஒன்றிலும் அவரை அனுமதித்தனர்.
இதுகுறித்து கிரண் பர்திகர் கூறியதாவது:-
எனது மகனின் நிதிநிலை சரியில்லை. அவர் என்னை கவனிப்பதா அல்லது மனைவி குழந்தைகளை கவனிப்பதா என்ற குழப்பத்தில் இருக்கிறார். அவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை.
கொரோனா நோய் தொற்று காரணமாக பலரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் வேலைகளை இழக்கிறார்கள். அரசும் எந்த உதவியும் செய்யவில்லை. என் மகனை மகிழ்ச்சியாக வைத்திருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.