டெல்டா வகையாக இருந்தாலும் சரி, வேறு ஏதேனும் புதிய வகையாக இருந்தாலும் சரி தடுப்பூசி செலுத்தினால் பாதிப்பிலிருந்து 90 சதவீதம் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.
கொரோனா முதல் அலையின்போது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ‘ஆல்பா’ வகை வைரஸ் தொற்று காணப்பட்டது. இந்த ஆல்பா வகை வைரஸ் தொற்று நாளடைவில் தன்னை காத்துக்கொள்ள உருமாற்றமடைந்து வீரியமானது. இந்தியாவில் உருமாற்றமடைந்த அந்த வைரஸ் தொற்றை ‘டெல்டா’ வகை கொரோனா என்று உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது.
இந்த நிலையில், 2-ம் அலை நாடு முழுவதும் ஏற்பட்டபோது தமிழகம், மராட்டியம் போன்ற மாநிலங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டன. பின்னர் அதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக பொது சுகாதாரத் துறை முடிவு செய்தது. வைரஸ் தொற்றின் மரபணுவை ஆய்வு செய்து தமிழகத்தில் எந்த வகையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய திட்டமிட்டது.
இதையடுத்து, குடும்பமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சியின் மூலம் கொரோனா பாதிப்புக்குள்ளானோர், இளம் வயதினர், குழந்தைகள், இணை நோயின்றி கொரோனாவால் உயிரிழந்தோர் மற்றும் தடுப்பூசி செலுத்தியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மொத்தம் 1,159 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை பெங்களூருவில் உள்ள வைரஸ் மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
அதில் 554 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி 386 பேர், அதாவது 70 சதவீதம் பேர் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. வெறும் 47 மாதிரிகளில் மட்டுமே ‘ஆல்பா’ வகை கொரோனா வைரஸ் காணப்பட்டது. டெல்டா வகை தொற்றுக்குள்ளானோரில் 81 சதவீதம் பேர் வளரிளம் பருவத்தினரும், வயதானவர்களுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 554 மாதிரிகளில் 96 மாதிரிகள் குழந்தைகளிடமிருந்து பெறப்பட்டவை. அதில் 76 சதவீத குழந்தைகள் டெல்டா வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தியும் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 83 சதவீதம் பேரின் சளி மாதிரியில் டெல்டா வகை வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டது. இதேபோன்று ஒரே பகுதி அல்லது நிகழ்ச்சியின் வாயிலாக பாதிப்புக்குள்ளானவர்களில் 30 சதவீதம் பேரிடமும், குடும்பங்களாக பாதிக்கப்பட்டவர்களில் 23 சதவீதம் பேரிடமும் அந்த வகை தொற்று காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-
வைரஸ் தம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க உருமாறிக் கொண்டேதான் இருக்கும். அந்த வகையில்தான் தற்போது டெல்டா வகை பாதிப்பு தமிழகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அச்சப்படத் தேவையில்லை. தடுப்பூசிகளை சரியாக செலுத்திக் கொண்ட பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று வரவில்லை. அவ்வாறு தொற்றுக்குள்ளான வெகு சிலருக்கும் கூட பாதிப்புகள் குறைவாகவே இருந்துள்ளன.
எனவே, டெல்டா வகையாக இருந்தாலும் சரி, வேறு ஏதேனும் புதிய வகையாக இருந்தாலும் சரி தடுப்பூசி செலுத்தினால் பாதிப்பிலிருந்து 90 சதவீதம் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.