தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்னில் சுருண்டது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயிண்ட் லுசியாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதனபடி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 298 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.குயின்டன் டிகாக் 96 ரன்னும், கேப்டன் எல்கர் 77 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், கைல் மேயர்ஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை ஆடியது. தென் ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சால் அந்த அணி திணறியது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ஓவர்களில் 149 ரன்களில் சுருண்டது.அதிகபட்சமாக பிளாக்வுட் 49 ரன்னும், ஷகிஹோப் 43 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் முலாடர் 3 விக்கெட்டும், ரபாடா, நிகிடி, கேசவ் மகராஜ் தலா 2 விக்கெட்டும், நூர்ஜே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
149 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இம்முறை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அபாரமாக பந்து வீசினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தென் ஆப்பிரிக்கா அணியின் வான் டெர் டுசன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ரபாடா ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடியால் தென் ஆப்பிரிக்கா அணி 150 ரன்களை கடந்தது.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 53 ஓவரில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வான் டெர் டுசன் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரபாடா 40 ரன்னில் அவுட்டானார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 4 விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது.