முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான சுஷ்மிதா சென் கடந்த 2005-ல் மும்பையை வியாபாரி ஒருவர் மூலமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தம் புதிய ‘லேண்ட்-க்ரூஸர்’ கார் ஒன்றை ரூ.55 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.
ஆனால் அந்தக்கார் 2004 மாடல் என சென்னை துறைமுகத்தில் போலியாக கணக்கு காட்டி இறக்குமதி செய்தது மட்டுமல்லாமல், வரிஏய்ப்பு செய்திருப்பதையும் சுங்க இலாகா துறையினர் கண்டு பிடித்தனர். இதுதொடர்பாக காரை இறக்குமதி செய்து விற்பனை செய்ததாக, மும்பையைச் சேர்ந்த ஹரன் சோக்சே மற்றும் வாசு பண்டாரி தமலா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான 2-வது பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு சுங்க இலாகா தரப்பு சாட்சியமாக நடிகை சுஷ்மிதா சென், நீதிபதி ஜாகீர் உசேன் முன்பாக ஆஜரானார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சுஷ்மிதா சென்னிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றனர். அதையேற்று நீதிபதி விசாரணையை பிப்ரவரி 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.