ஜல்லிக்கட்டு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தம்மால் எதுவும் செய்ய முடியாது என இந்திய மத்திய பாஜக அரசு மீண்டும் தமிழ்நாட்டின் முதுகில் குத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு என்பது தமிழினத்தின் பண்பாட்டு அடையாளம்; அது தமிழினத்தின் கலாசார உரிமை; இதற்கு தடை விதிக்க கூடாது என தமிழகமே போர்க்கோலம் பூண்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து இடங்களும் போர்க்களமாக மாறிவிட்டது.
இதையடுத்து வேறுவழியின்றி முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க மோடியிடம் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியிருந்தார்.
அப்போது, ஜல்லிக்கட்டு கலாசாரத்தை மத்திய அரசு பாராட்டுகிறது; ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு தரும்; அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தம்மால் எதுவும் செய்ய முடியாது என மோடி கூறியிருக்கிறார்.
அதாவது தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தம்மால் அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என கூறிவிட்டது மத்திய பாஜக அரசு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது வரிந்து கட்டிக் கொண்டு போய் அதெல்லாம் முடியாது என சொன்ன மத்திய பாஜக அரசு இப்போது உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி தமிழினத்தின் உணர்வை மதிக்காதது ஒரு தேசிய இனத்தை அவமதிப்பதாகும்.