ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு அறவழியில் போராட்டம் நடத்தவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகிறார். அவரும், தனது வீட்டின் முன்பு அறவழியில் அமைதியான போராட்டத்தை நடத்தினார். அவரைப்போலவே லட்சக்கணக்கான இளைஞர்களும் – மாணவர்களும் சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களை அடக்குவதற்காக சென்னை மெரீனாவில் ராணுவத்தை குவிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து, சிம்பு ஒரு விஷயத்தை போராட்டக்காரர்களிடையே பகிர்ந்தார். அப்போது அவர் பேசும்போது, போராட்டக்காரர்களை அடக்குவதற்காக மெரீனாவில் ராணுவத்தை குவிக்கப்போவதாக சொல்கிறார்கள். உடனே, என்னுடைய நண்பர்கள் எனக்கு ஒரு யோசனையை சொன்னார்கள்.
அதாவது, தேசியக் கொடியை உங்கள் உடம்பில் போர்த்திக் கொள்ளுங்கள். அப்போது ராணுவம் எப்படி நம்மீது கை வைப்பார்கள் என்று பார்ப்போம். தேசிய கொடி நம் மேல் இருந்தால் அவர்களால் அடிக்க முடியுமா? அதனால், உடனடியாக போராட்டக்காரர்களுக்கு தேசியக் கொடி கிடைக்கும்படி செய்யுங்கள். எங்கெங்கு தேசிய கொடி கிடைக்குமோ? அங்கு சென்று அவர்களை தட்டியெழுப்பி வாங்கி, போராட்டக்காரர்களிடம் ஒப்படையுங்கள் என்றார். இதை உடனடியாக சமூக வலைத்தளங்களில் சேர்க்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.