அனைத்து வைரஸ்களும் காலப்போக்கில் உருமாற்றமடையும். அதில் கோவிட்-19 வைரஸ் மட்டும் வேறுபட்டதல்ல. இப்படி வைரஸ்கள் உருமாறும் போது, அதன் பண்புகளில் சிறு மாற்றங்களை ஏற்படுத்தினாலும், வேறு சில மாற்றங்கள் வைரஸை மேலும் பரவக்கூடியதாக மற்றும் ஆபத்தானதாக மாற்றக்கூடும்.தற்போது ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் மற்றும் எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவின் உருமாற்றம் அடைந்துள்ள காமா மாறுபாட்டில் (P1) ஒரு புதிய பிறழ்வு ஏற்பட்டுள்ளதாகவும், அது அதிக இறப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் கண்டறிந்துள்ளனர். கொரோனாவின் இந்த காமா மாறுபாடு முதன்முதலில் பிரேசிலில் தோன்றிய மாறுபாடு என்பதால், இது பிரேசிலிய மாறுபாடு என்றும் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பு இந்த கொரோனா மாறுபாட்டை ‘ கவலையின் மாறுபாடு (variant of concern)’ என குறிப்பிட்டது.ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த புதிய காமா பிறழ்வு வேகமாக பரவுவது, அதிக தொற்று விகிதங்கள் மற்றும் அதிகமான நோய்க்கிருமித்தன்மையையும் கொண்டுள்ளது. இந்த ஆய்வானது மரபணு தொற்றுநோயியல் (Genetic Epidemiology) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கவலையின் மாறுபாடு
ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை GWAS முறையின் அடிப்படையில் கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவைப் பெறுவதற்காக SARS-CoV-2 பிறழ்வுகள் மற்றும் கோவிட்-19 இறப்பு தரவுகளின் முழு-மரபணு வரிசைமுறை தரவுகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டிலேயே தொடங்கினர். இந்த ஆய்வில் செப்டம்பர் 2020 இல் பிரேசிலில் 7,548 கோவிட்-19 நோயாளிகளில் SARS-CoV-2 வைரஸின் ஒற்றை-தனிமைப்படுத்தப்பட்ட ஆர்.என்.ஏ மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை அவர்கள் தேடினர். அதில் வைரஸின் ஒரு குறிப்பிட்ட ஸ்பைக் புரதத்தில் மாற்றத்தைக் கண்டனர். இந்த மாற்றமடைந்த வைரஸ் பிறழ்வு அதிக கோவிட் நோயாளிகளின் இறப்புடன் இணைக்கப்பட்டுள்ளதை அறிந்தனர்.
GWAS முறை
இந்த ஆய்வில் வைரஸ் மரபணுக்களில் குறிப்பிட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள பிறழ்வுகள் மற்றும் நோய் விளைவுகளுக்கு இடையிலான சாத்தியமான இணைப்புகளை பகுப்பாய்வு செய்ய GWAS முறையை பயன்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதோடு தற்போதைய பெருந்தொற்று காலத்தில் புதிய ஆபத்தான மாறுபாடுகள் அல்லது புதிய வைரஸ் விகாரங்களை சிறப்பாக கண்டறிய இந்த முறை உதவும் என்றும் கூறுகின்றனர்.
பிரேசிலில் இரண்டாவது அலையை தூண்டிய பிறழ்வு
P1 மாறுபாடு முதன்முதலில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரேசிலில் வெளிவந்தது. அது வெளிவந்த சில வாரங்களுக்குள், பிரேசிலில் உள்ள மனாஸ் என்ற நகரத்தில் திடீரென்று கொரோனா வழக்கில் ஒரு குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டது. கொரோனா முதல் அலையின் போதே பிரேசிலில் பலர் வைரஸிற்கான ஆன்டிபாடிகளை உருவாக்கியதால், அங்குள்ள மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்துள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர்.ஆனால் அதற்கு பதிலாக ஸ்பைக் புரதத்தில் பல பிறழ்வுகளைக் கொண்ட P1 தான் இரண்டாவது அலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை அதன் பின்னரே கண்டார்கள். மேலும் இந்த மாற்றமடைந்த வைரஸ் அப்பகுதியில் காணப்பட்ட முந்தைய மாறுபாடுகளைக் காட்டிலும், அதிகமாக பரவுதல் மற்றும் அதிக இறப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிய வந்தது.
இது உங்களை எவ்வாறு பாதிக்கிறது?
கோவிட்-19 இன் பல்வேறு விகாரங்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எவ்வளவு விரைவாக பயணிக்கின்றன என்பதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். முன்னதாக இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய டெல்டா மாறுபாடு, தற்போது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் பரவி சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகில் எந்த பகுதியிலும் நிகழும் கோவிட்-19 இன் பிறழ்வு மற்ற பகுதிகளுக்கும் பயணிக்கக்கூடும். காமாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஒரு கடுமையான பிறழ்வாக இருப்பதால், இது உலகின் வேறு எந்த பகுதிகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தலாம்.
தற்போதைய பிரேசிலின் நிலைமை
பிரேசிலில் கொரோனாவால் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பிரேசிலின் இறப்புகளின் எண்ணிக்கை 5,09,282 ஆகும். மேலும் அரை மில்லியனுக்கும் அதிகமான கோவிட் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை பட்டியலில் உலகளவில் இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.